காட்டு பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அதிகாரி செல்வராஜுக்கு காளம்பாளையம் பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வைத்து திருமூர்த்தி, மாரிசாமி என்ற 2 வாலிபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் காட்டு பன்றியை வேட்டையாடிப் தனது உறவினர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.
இதனால் வனத்துறையினர் திருமூர்த்தி, மற்றும் மாரிசாமிக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும், அவர்களுடன் காட்டு பன்றியை சமைத்து சாப்பிட்ட 8 பேருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினரின் அறிவுரைப்படி காரமடை காவல்துறையினர் 2 பேர் மீதும் வெடிமருந்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பின் அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.