தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக ரெம்டெசிவர் மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தை 100mg குப்பிகளை ரூ 14,000 வரை விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ.900 முதல் அதிகபட்சமாக 4800 ரூபாய் வரை கிடைக்கும் இந்த மருந்தை, பணக்கார நோயாளிகளுக்கு 40,000 வரை கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.