சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முழு ஊராடங்கால் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் நேற்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி சிவகங்கை நகரில் மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், பால் கடை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் கார், ஆட்டோ, பஸ், வேன் போன்றவைகள் ஓடவில்லை. இதனால் பெட்ரோல் பங்குகளில் தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல் மால், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கையில் நேற்று போக்குவரத்து இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் சிறுவர்கள் கால்பந்து, கிரிக்கெட் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.