சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே சக்கந்தி கிராமத்தில் குருமூர்த்தி (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜா சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேவகோட்டையில் இருந்து சக்கந்திக்கு குருமூர்த்தி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குருமூர்த்தி வைந்தனி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவரை ராஜா வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து தேவகோட்டை காவல் நிலையத்தில் குருமூர்த்தி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.