இருசக்கர வாகனத்தில் 600 சாராய பாட்டில்களை கடத்தி வந்தவர்களில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசூர் என்ற இடத்தில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பெரம்பூர் காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் 180 மி.லி அளவு உடைய 600 சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜெயகாந்தன் மற்றும் நடராஜன் என்பது தெரியவந்துள்ளது. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது நடராஜன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் ஜெயகாந்தனை கைது செய்து அவரிடமிருந்த 600 சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய நடராஜனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.