பெண் ரயில்வே கேட் கீப்பரிடம் செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் சமயநல்லூரை சேர்ந்த செல்வி என்ற பெண் சோழவந்தான் வைகை ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் பணிக்கு வந்துள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் 2 மர்ம நபர்கள் ஏதோ விசாரிப்பது போல் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு வந்துள்ளனர். அப்போது ஒரு மர்ம நபர் செல்வியின் கண்ணத்தில் திடீரென்று வேகமாக அடித்துள்ளார்.
இதில் பயந்துபோன செல்வி செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். இதனை அடுத்து மற்றொருவர் செல்வியிடம் இருந்த செல்போனையும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளார். அதன்பின் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் மதுரை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காட்டு பகுதியில் ஒரு பெண்ணை கீப்பராக வைத்திருப்பதும் உதவியாளரும் கண்காணிப்பு கேமராவும் இல்லாத நிலையில் இருப்பதும் குறித்து கேள்வி எழுந்துள்ளது. மேலும் அந்த இரண்டு மர்ம நபர்களை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.