மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 51 ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மக்கள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்கும்போது அவர்கள் கூறியதாவது “அன்றாடம் பயன்படுத்தும் இந்தத் தண்ணீரில் புழுக்கள் வருவதால் சமைப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்த முடியவில்லை.
மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்குவதற்கு எல்லாத் தரப்பினராலும் முடியாத காரணத்தினால் நாங்கள் செய்வதறியாது இருக்கிறோம். மேலும் நல்ல தண்ணீரில் வரும் புழுக்களினால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நாங்கள் வேதனையில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.