ஆந்திர மாநிலத்தில் கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
சில நாட்களுக்கு முன் மும்பையில் பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் உற்பத்தி ஆகும் வம்சதாரா மற்றும் நாகவல்லி ஆறுகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டினம் மற்றும் செங்கப்பள்ளி அருகே வங்கக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக வெள்ளமாக ஓடுகிறது. இந்நிலையில் வம்சதாரா ஆற்றிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வங்க கடலில் கலப்பதால் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது .