திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே முதியவர் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி செட்டியார் தெருவில் பழனிச்சாமி (65) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் பள்ளபட்டிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து வந்தார். ஆனால் அவர் பள்ளப்பட்டியில் இறங்குவதற்கு முன்னதாகவே பேருந்து புறப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் உடனே கவுண்டன்பட்டி பிரிவு அருகே பேருந்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். அங்கு பேருந்து நின்றதும் பழனிசாமி பேருந்திலிருந்து இறங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பேருந்து புறப்பட்டது. இதனால் அந்த முதியவர் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அம்மைநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.