ஒப்பந்த தொழிலாளர்களையும், காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர்களையும் குளவி கொட்டியதால் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் வசித்துவரும் சுந்தர், மைக்கேல், கோபிநாத், ரகுநாத் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் இந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த தொட்டியின் அருகில் இருக்கும் மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் சுத்தம் செய்ய சென்ற ஒப்பந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது. அந்த சமயம் தொழிலாளர்களால் கீழே இறங்க முடியாததால் குடிநீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்தவாரே கீழ்ப்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நான்கு தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குளவிகள் தீயணைப்பு வீரர்களையும் கொட்டியுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 13 பேரை குளவி கொட்டியதால் அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுந்தர் என்ற ஒப்பந்த ஊழியருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.