திண்டுக்கல்லில் காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 123 காவல்துறையினர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் 44 கேமராக்கள் வெளிப்புற பகுதியிலும், 80 கேமராக்கள் உள்பகுதியிலும் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டு, மின்தடை ஏற்படாமல் இருப்பதற்காக 7 ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள சாலைகள் வழியாக செல்லும் கண்டெய்னர் லாரிகள் மற்றும் வாகனங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வருகின்றன. இதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதால் லாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து செல்வதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.