தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் திறக்கப்படாததால் நிறைய கிராமப்புற மற்றும் நகர்புற விளிம்புநிலை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலைக்குச் செல்கின்றனர். இவர்களை மறுபடியும் பள்ளிக்கு கொண்டு வருவது பெரிய வேலை. மே 2ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கும் கட்சி இதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.