வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகள், உள்மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவது வழக்கமான ஒன்றுதான்.
இந்த ஆலயம் “லூர்து நகர்” என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு எதிரே வங்க கடலும் அமைந்திருப்பது சிறப்புகுரியதாகும். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூடுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏமாற்றத்துடன் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கோவிலின் வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.