தென்தாமரைகுளம் அருகே மின்கம்பி மீது கார் மோதியதில் 3 நபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைகுளம் அருகில் சாமித்தோப்பில் இருந்து மணக்குடி செல்லும் போக்குவரத்து சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் அந்த கார் காமராஜபுரம் அருகில் சாலையில் நடந்து சென்றிருந்த சிவகாமி என்பவர் மீது மோதியதோடு, அவ்வழியாக சென்ற சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் தென்தாமரைகுளத்தில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் தேவசதானந்தம் மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் வசிக்கும் லிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அதிவேகமாக சென்ற அந்த கார் மின்கம்பி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதில் மின்கம்பத்தின் மீது மோதியதால் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்துவிட்டது. இதனைதொடர்ந்து அந்த காரை ஓட்டிசென்ற டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மின்கம்பம் சேதம் அடைந்ததால் அங்கு இருக்கக்கூடிய 10 கிராம பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கார் விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜன், ஜான் கென்னடி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின்னர் கவிழ்ந்து கிடந்த கார் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சாமிதோப்பு அருகிலுள்ள செட்டிவிளை பகுதியில் வசிக்கும் ஜவகர் என்பவர் தனது நண்பரின் காரை எடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் காரில் இருந்து தப்பி ஓடிய ஜவகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.