கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் சீதாதேவி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்ற சீதாதேவி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் அந்த பெண் கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி அமைந்துள்ளதாகவும், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே வட்ட வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் மற்றும் தாசில்தார் என அனைவரிடமும் கடந்த 3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குடியிருப்பு பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்ததால் அந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.