நகராட்சியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடந்த ஒரு மாத காலமாக கடும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ததற்கான அடையாளமும் காணப்படவில்லை. இந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்த பின் சில மணி நேரங்கள் கழித்து பார்க்கும்போது பாத்திரத்தின் அடியில் இரும்புத்தாது போற்று காணப்படுகிறது.
மேலும் நுரை தன்மையுடன் இருப்பதால் இந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.