பிரிட்டனில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்த 18 வயது இளைஞர் திடீரென்று துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் சசெக்ஸியில் கிராலி என்ற கல்லூரி மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் ஒரு இளைஞர் துப்பாக்கியும் கத்தியுமாக நுழைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் திடீரென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதனால் மைதானத்தில் இருந்த அனைத்து மாணவர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு ஆசிரியர் அந்த இளைஞரை தனியாக போராடி தரையில் தள்ளி பிடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தில் கல்லூரி பணியாளர்கள் இருவர் காயமடைந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு துப்பாக்கியால் காயம் ஏற்படவில்லை, அது கத்தியால் ஏற்பட்ட காயம் தான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த இளைஞரை தைரியமாக, ஒரே ஆளாக நின்று பிடித்த ஆசிரியரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.