பிரபல இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் தாமிரா ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் தாமிரா மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் ஆரி அர்ஜுனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் முதல் வெள்ளித்திரை பயணத்திற்கு வித்திட்ட இயக்குனரும் மாபெரும் கதாசிரியரான தாமிரா இன்று நம்மோடு இல்லை என்ற செய்தி எனக்கு பேரதிர்ச்சி கொடுத்து என்னை மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது .
எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் தாமிரா அவர்களின்
மறைவுச் செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்😭இந்தக் கொரானா இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ தெரியவில்லை. உறவுகளே நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். pic.twitter.com/rdRY6pz8ij
— Aari Arujunan (@Aariarujunan) April 27, 2021
என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்த போது எனக்கு சிறியதாக தயக்கம் இருந்தது, அப்போது நீ சரியாக இருக்கும்போது உன்னை யார் மாற்ற இயலும் என்று என் தயக்கத்தைப் போக்கி என்னை பிக்பாஸில் அடியெடுத்து வைக்க ஊக்கப்படுத்தினார். அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் மறைவினால் அவரது எண்ணங்களில் தோன்றிய எத்தனையோ சிறந்த கதைகளும் மரணித்து விட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.