கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் தற்போது மலேசியாவில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரேவதி அடிக்கடி 17 வயது சிறுமியுடன் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு தயாராக இருக்கும் ஆட்டோவில் பயணம் செய்வது வழக்கம். இதனையடுத்து தன்னை ஒரு பணக்கார பெண் போல் காட்டிக் கொள்ளும் ரேவதி அருள் என்பவரின் ஆட்டோவில் அடிக்கடி சவாரி செய்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரேவதி தனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் தங்களிடம் அதிக அளவில் கருப்பு பணம் உள்ளது எனவும், அதனை வெள்ளையாக மாற்றி வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அருளிடம் நீங்கள் அடகு வைத்த தங்க நகைகளின் சீட்டை கொடுத்தால் நகைகளை மீட்டு தருவதுடன் ஒரு நல்ல கமிஷன் தொகையை உங்களுக்கு தருகிறேன் என்று ரேவதி ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனால் அருள் தனக்கு பழக்கமான மற்றொரு ஆட்டோ டிரைவரான கதிர் என்பவர் அடகு வைத்திருந்த 19 பவுன் நகைகளுக்கான ரசீதை வாங்கி ரேவதியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அருளிடம் பேசுவதை ரேவதி தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆட்டோ டிரைவர் கதிர் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேவதியையும், அவருக்கு உதவியாக இருந்த 17 வயது சிறுமியையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் தேவை என்று கேட்டால் யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள் எனவும், அதனாலேயே கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று கூறி அடகு வைத்த நகையின் ரசீதை வாங்குவேன் என ரேவதி கூறியுள்ளார். அதன் பிறகு அந்த நகையை மீட்டு கூடுதல் விலைக்கு விற்று விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு செல்போனை அதிகமாக உபயோகிக்க தெரியாது என்பதால் தான் 17 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று நூதன மோசடியில் ஈடுபட்டதாக ரேவதி ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் காவல்துறையினர் அவரிடம் இருந்த 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.