7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொன்ற குற்றத்திற்காக குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை துடியலூர் காவல் துறையினர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷிற்கு தூக்கு தண்டனை விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சந்தோஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது எனவும், இவ்வழக்கில் மேலும் ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளனர். எனவே கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளியான சந்தோஷுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் ஒரு குற்றவாளியை எந்த விதத்திலும் தங்களை திருத்திக் கொள்ள மாட்டார்கள் என்று கருதும் சமயத்தில் தான் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் சந்தோஷிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். மேலும் சந்தோஷ் குமாரின் தண்டனையை குறைக்க கூடாது எனவும், 25 ஆண்டுகள் வரை அவரை விடுதலை செய்யவே கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.