கொரோனா சிகிச்சை மையமாக ஈஷா வித்யா பள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிடம் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம்அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இருக்கும் வித்யா பள்ளிகளை தமிழக அரசுக்கு கொரோனா சிகிச்சை மையமாக அளிக்க உள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை 990 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்களாக தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழக அரசு தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் இருக்கும் ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஜக்கி வாசுதேவ் தனது ஓவியங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டதன் மூலமாக திரட்டப்பட்ட நிதியான 11.54 கோடியை கடந்த ஆண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அதோடு மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் முககவசம் வழங்கி உதவி செய்துள்ளனர். தற்போது கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஈஷா அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.