இந்தியாவில் தற்போது கொரோனா உச்சத்தை அடைய காரணம் என்ன என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா, தற்போது இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்திருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
எனவே நாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இதனால் உலக சுகாதார மையம் பாதிப்படைந்தவர்களுக்காக 4000 ஆக்சிஜன் உபகரணங்களை அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளரரான தரிக் ஜசரேவிக் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 15% நபர்களுக்கு மட்டும் தான் மருத்துவமனையின் பராமரிப்பு தேவை.
அதற்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நபர்களுக்கு தான் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் பாதிப்பு ஏற்பட்ட அனைவருமே மருத்துவமனையை நாடுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவின் இந்த நிலைக்கு அதிக மக்கள்தொகை, தடுப்பூசி குறைவாக இருப்பது ஆகியவை தான் காரணம் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.