திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை கிடங்குகளில் வேளாண்மை இணை இயக்குனர் கி. ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு குறைவாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்தபின் உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்ததும் இருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து உரம், இருப்பு மற்றும் விலை விவரங்கள் பற்றிய தகவலை நிச்சயமாக கடைகளில் பாதுகாக்க வேண்டும் என்றும், அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று 2020- 2021 ஆம் ஆண்டு விலையில் தான் தற்போதும் டி.ஏ.பி, பொட்டாஷ், மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலும், சரியான ஆவணங்கள் இன்றி விற்பனை செய்தாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.