ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தொலைபேசியில் ஆண் ஒருவருடன் பேசியதற்காக சாட்டை அடி வாங்கிய பரபரப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்கான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் அவர்கள் நீதி கேட்டு தலிபான்களை நாடி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் அவர்கள் வெளியேறிவிட்டால் ஆப்கானில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படம் சான்றாக அமைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஹப்பிடகோல என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு ஆணுடன் தொலைபேசியில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை ஓரிடத்திற்கு அழைத்து வந்து ஆண்கள் பலர் சூழ்ந்து அந்த பெண்ணுக்கு தலிபான் தலைவர்கள் மூவர் 50 சவுக்கடிகள் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததைடுத்து ஏராளமான மக்கள் கூடி இருக்க ஒருவர் அந்த பெண்ணை சவுக்கால் அடிக்கிறார்.
இதையடுத்து அவருக்கு சவுக்கால் அடி கொடுத்து கை ஓய்ந்ததும் அந்த சட்டையை அவர் வேறு ஒருவரிடம் கொடுக்க அவர் அந்த பெண்ணை தொடர்ந்து அடிக்கிறார். அதில் அந்த பெண் வலி தாங்க முடியாமல் நான் செய்தது தவறு தான், தவறை உணர்ந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதும் அந்த பெண்ணை அவர் விடாமல் அடிக்கிறார். இதை சுற்றி உள்ள சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டும், சிலர் மொபைல்களில் வீடியோ எடுத்தும் உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணுடன் பேசிய ஆணுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி ஆப்கானில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் அங்குள்ள ஆப்கான் மக்கள் அமெரிக்க படைகள் ஆப்கானில் இருக்கும் போதே இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்கிறது அவர்கள் அமெரிக்காவிற்கு திரும்பி சென்று விட்டால் தங்களுடைய நிலை என்னவாகுமோ என்று தெரியாமல் அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.