கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை செல்லும் சாலையில் இருக்கும் முனியப்பன் கோவில் அருகிலுள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு இளம் பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மேலே கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் சடலத்தை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.