ஆட்டோ மீது லோடு வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா குரூஸ் என்ற மகன் உள்ளார். இவர் ஆத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சாந்தா குரூஸ் ஆத்தூர் கீழக்கரை பகுதியில் வசிக்கும் அமீர் சுல்தான் என்பவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை ஆட்டோவில் ஏற்றி நெல்லையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் இவரது ஆட்டோவில் அமீர் சுல்தான் உடன் அவருடைய அண்ணன் மகன் ரிஸ்வான் என்பவரும் இருந்துள்ளார்.
இந்நிலையில் மூவரும் ஆட்டோவில் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் பொன் சிங் என்பவர் ஓட்டி வந்த லோடு வேன் இவரது ஆட்டோ மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து ஆட்டோவில் பயணம் செய்து படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.