காதல் விவகாரத்தில் வாலிபர் 16 வயது சிறுவனை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் தெருவில் நின்று கொண்டிருந்தபோது காந்திநகர் பகுதியில் வசிக்கும் மதன்குமார் என்ற வாலிபர் அங்கு சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுவன் மதன்குமாரிடம் எங்கள் பகுதிக்கு எதற்காக அடிக்கடி வருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு மதன்குமார் அந்த தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், நான் வருவதை கேட்பதற்கு நீ யார் என தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் பெருமாள் தெரு பகுதியில் இருக்கும் ஒரு விளையாட்டு மைதானத்தில் அந்த சிறுவனும் அவரது நண்பர்களும் விளையாடிக்கொண்டிருந்த போது தனது நண்பர்களான மணி, கார்த்திக் மற்றும் இரண்டு பேருடன் அங்கு சென்ற மதன் குமார் அரிவாளால் அந்த சிறுவனை தாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுவனின் இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்து விட்டது. இதனையடுத்து படுகாயம் அடைந்த அந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ளவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் 16 வயது சிறுவனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.