எலிக்காக விஷம் கலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை வாலிபர் தின்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர் கிராமத்தில் ராமச்சந்திரன்-தமிழ்ச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திக், கவிதாஸ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கார்த்திக் முதல் வருடம் பி.பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால் வாழைப்பழத்தில் எலி மருந்தை கலந்து அதனை டிவியின் மேல் வைத்துள்ளார்.
இதனையடுத்து கார்த்திக் மாலை விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து டிவியின் மேல் உள்ள வாழைபழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கச் சென்றுள்ளார். அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து வாந்தி எடுத்துள்ளார். எதற்காக வாந்தி எடுக்கிறாய் என்று கார்த்திக்கின் அம்மாவான தமிழ்ச்செல்வி கேட்டுள்ளார்.
அதற்க்கு கார்த்திக் வாழைப்பழத்தை சாப்பிட்டதாக கூறியுள்ளார். உடனே தமிழ்ச்செல்வி அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கார்த்திகை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.