மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனையில் தன் படுக்கையை 40 வயது நபருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா இளம் வயதினரை தான் அதிகமாக தாக்குகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 85 வயது முதியவரான நாராயண் பவுராவ் தபட்கர் என்பவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் அவரின் ஆக்சிஜன் அளவு 60 ஆக குறைந்துவிட்டது. அதன் பின்பு அவரது மகள் மற்றும் மருமகன் இருவரும் நீண்ட போராட்டங்களை சந்தித்து இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு அதிக முயற்சிக்கு பின்பு தான் படுக்கை கிடைத்துள்ளது.
அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒரு பெண் கதறி அழுதபடி தன் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார். அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறையால் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது. இதனால் தன் கணவருக்காக அந்த பெண் படுக்கையை தேடி அலைந்து கொண்டிருந்துள்ளார்.
இதனைப்பார்த்து வேதனையடைந்த நாராயண், மருத்துவரிடம் நான் 85 வயதை கடந்துவிட்டேன். வாழ்வில் நிறைய பார்த்துள்ளேன். என் வாழ்க்கை முடிந்து போய்விட்டது. அந்த பெண்ணின் கணவருக்கு தான், என்னை விட இந்த படுக்கை அவசியமானது. அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.
அவரின் குழந்தைகளுக்கு தந்தை முக்கியம். இல்லையெனில் அவர்கள் அனாதைகளாக ஆகிவிடுவார்கள் என்று கூறி தன் படுக்கையை அவருக்கு கொடுத்து விட்டு, வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் வீட்டிற்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவர் மரணமடைந்தார். தற்போது இதனையறிந்து, அவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.