சிவகங்கை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் முடிதிருத்துவோர் சார்பில் மாவட்ட மருத்துவ சமுதாய பேரவை மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பெரிய மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை முழுமையாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் வைத்து நடத்தி வருபவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரிய கடைகளை விதிமுறைகளை பின்பற்றி திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதுபோல முக கவசம் அணிவது, மருந்து தெளிப்பது, கடைகளில் ஆட்களை அதிக அளவில் கூடாத வண்ணம் நெறிமுறைகளைப் பின்பற்றி முடி திருத்தும் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் 150 சலூன் கடைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ள 200 குடும்பங்கள் மீண்டும் கடைகள் மூடப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இதற்கு நிவாரணமாக ரூ.20,000 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.