திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மில் தொழிலாளியை காதல் திருமணம் செய்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே அய்யலூர் களர்பட்டியில் பிரவீன்பாண்டி (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்த மில்லில் வடமதுரை அருகே உள்ள நன்னி ஆசாரியூரில் வசித்து வரும் கவிதா என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்பாண்டி, கவிதா ஆகிய இருவரும் ஒரே மில்லில் வேலை செய்ததால் இருவருக்குமிடையே கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அவர்களது காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அய்யலூரில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இருவரும் வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருடைய பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் அவர்களுக்கு சமரசம் ஏற்படவில்லை. எனவே காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் அவர்களை விரும்பும் போல் வாழ்ந்து கொள்ளலாம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.