பயிற்சியின் போது இளம்பெண் காரை பின்னோக்கி இயக்கியதால் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிரோஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் விஜய் அப்பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் அஜய் என்பவருடன் அவரது உறவினர் பெண்ணான மோனிகா என்பவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து மோனிகா காரை பின் நோக்கி வேகமாக இயக்கியதால் விளையாடிக் கொண்டிருந்த விஜய் மீது கார் ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்தார். அதன்பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாங்காடு காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜய் மற்றும் மோனிகாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிறுவனின் இறப்பிற்கு காரணமான அந்த காரை அடித்து நொறுக்கி விட்டனர். மேலும் மோனிகாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. எனவே பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்த மோனிகா காரை ஒட்டி பழகும் போது இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.