மாயமான வாலிபர் முட்புதரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் வினோத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற வினோத் கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பாததால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு வினோத்தின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வினோத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து மேடவாக்கம் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் ஈஸ்வர் என்ற பிரகதீஷ் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது ஈஸ்வரின் நண்பரான டில்லி பாபு என்பவரை கொலை செய்த கும்பலில் சங்கு ராஜா என்பவர் இருந்துள்ளார். இந்த சங்குராஜாவுடன் வினோத் நெருங்கிப் பழகியதால் கோபமடைந்த ஈஸ்வரன் குடிபோதையில் ஒரு வாரத்திற்கு முன்பு வடக்குப்பட்டு ஏரிகரை பகுதிக்கு வினோத்தை அழைத்துச் சென்று வினோத்தை கட்டையால் அடித்துக் கொலை செய்து முட்புதரில் வீசி சென்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.