தேனியில் பொதுமக்கள் குடிநீர் குழாயை சரி செய்யாததால் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் மதுரை சாலையில் சில நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்கின்ற குடிநீரின் குழாயினுள் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்யாமல் விட்டதால் குடிநீருடன் சாக்கடை கலக்க ஆரம்பித்தது.
இதனையடுத்து அதனை சீரமைக்கக்கோரி அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் திடீரென்று மதுரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேனி காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குழாய்களை சீர் செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.