மனைவியின் மீதுள்ள சந்தேகத்தில் அம்மி கல்லை தலையில் போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ஆலோன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிரே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆலோன் தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். இதனால் முகம் சிதைந்த நிலையில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அதன்பின் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்த ஆலோனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில், ஆலோன் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு பேசுவதால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் தனது மகன் வீட்டிற்கு சென்ற லட்சுமியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த ஆலோன் அவருக்கு ஆசையாக பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின் லட்சுமி தூங்கிய பிறகு அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு ஆலோன் கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.