மருத்துவர்களால் இறந்ததாக கூறப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும் இடத்தில் உயிர் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் நகரில் லக்ஷ்மி பாய் என்ற வயதான மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு லட்சுமிபாய்க்கு பரிசோதனை நடந்த போது அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் லக்ஷ்மிபாய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் லட்சுமிபாயை கோகுள் நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பின் அங்கு வைத்து லக்ஷ்மியின் உடல் வெப்பமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன்பின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த லட்சுமிபாயின் பேத்தியான நிதிக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு மருத்துவருடன் விரைந்து வந்தார் நிதி.
இதனையடுத்து பாட்டியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸில் ஏற்றபட்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் காட்டப்படும் அலட்சியத்தாலும் ஈசிஜி சரியாக எடுக்காததாலும் தனது பாட்டியின் உயிர் பிரிந்து விட்டதாக நிதி குற்றம் சாட்டியுள்ளார்.