நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே-1 தொழிலாளர் தினமான அன்று பொதுவிடுமுறை என்பதால் முழுஊரடங்கிற்கு அவசியமில்லலை என்றும், மே-2 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. ஆனால் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளது.