பெரம்பலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி காந்திநகரில் சரவணன் (29) என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி கைகாட்டி பகுதியில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை நோக்கி காரைக்குடியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.
அதில் சரவணன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து ஆம்னி பேருந்து டிரைவர் பைரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.