பிரித்தானியாவில் 20 பெண்களை தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரபல நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபலமான இயக்குனராக வலம் வரும் நோயல் கிளார்க் 2017-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிரித்தானிய தேசிய விருதையும், லாரன்ஸ் ஒலிவியர், பாஃப்டா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபல நடிகரான இவர் மீது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்கள் என்று “தி கார்டியன்” என்னும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் நோயல் கிளார்க் தங்களை தேவையில்லாமல் தொடுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் குற்றம் சாட்டியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டிற்கு நோயல் மறுப்பு தெரிவித்ததோடு, தனது 20 ஆண்டு கால வாழ்க்கையில் நான் எனது வேலையில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை முன்னிலையில் வைத்திருக்கிறேன், எனவே எனக்கு எதிராக யாரும் இதுவரை புகார் கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் என்னுடன் பணிபுரிந்தவர்களில் யாருக்காவது அவமரியாதை அல்லது அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிய அவர் தவறான செயல்கள் அல்லது பாலியல் முறைக்கேடு செய்ததாக என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரபல நடிகரான நோயல் கிளார்க் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.