சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் நன்றாக பருவமழை பெய்ததால் ஏராளமான ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. இந்த நீரை கிராமமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தினர். மேலும் ஊருணிகள் மற்றும் கண்மாய்களில் இனப்பெருக்கத்திற்காக ஏராளமான மீன் குஞ்சுகள் விடப்பட்டது. தற்போது பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாயில் கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் வற்ற தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழா பல்வேறு கண்மாய்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காரைக்குடியை அடுத்துள்ள கலிபுலி ஊராட்சி பகுதியில் புலிகுத்தி அய்யனார் கோவில் கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடி திருவிழா நடைபெறும். இந்த வருடத்திற்கான மீன்பிடித் திருவிழாவும் நடைபெற்றது. அதில் புலிக்குத்தி, கல்லுவயல், கல்லுப்பட்டி, மணப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் அதிகாலையிலேயே கண்மாயில் திரண்டனர். அதன்பின் மடி வலை, ஊத்தா, கொசுவலை, கச்சா பயன்படுத்தி கண்மாய்க்குள் இறங்கி கெளுத்தி, குரவை, கெண்டை, அயிரை, ஜிலேபி ஆகிய அரிய வகை மீன்களை பிடித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவருக்கும் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.