இரண்டு போலீஸ்காரர்கள் மாணவரிடமிருந்து 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் 17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவர் தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருந்தார் 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவன் பேருந்து மூலம் இரவு நேரத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அதன் பின் மாணவரை சந்தேகத்தின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் வேல்முருகன் மற்றும் கார்த்திக் போன்றோர் சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த மாணவனிடம் இருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை போலீஸ்காரர்கள் இருவரும் பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து உடனடியாக தனது பெற்றோருக்கு அந்த மாணவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் விரைந்து சென்னைக்கு வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போலீசார்தான் மாணவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றுள்ளனரா அல்லது மாணவரே பணத்தைத் தொலைத்து விட்டு இப்படி கூறுகிறாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.