ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து கட்டார் தலைநகர் தோஹா வழியாக வந்த இருவருக்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் பயணத்தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஆஸ்திரேலியா நிர்வாகம் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அரசாங்கம் வரலாற்றிலேயே முதன்முறையாக பிற நாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு வரும் தங்கள் குடிமக்களை சட்டவிரோதமாக நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு மிகுந்த நாடுகளில் இருந்து ஒரு குடிமகன் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படலாம். இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்த வார தொடக்கத்தில் ஆஸ்திரேலியா நிர்வாகம் இந்தியாவிலிருந்து வரும் விமான சேவைகள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள சுமார் 9 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியாவின் இந்த கடும் நடவடிக்கையால் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.