ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பயங்கரவாதிகள் முன்னெடுத்த கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கிழக்கு லோகர் மாகாண தலைநகர் புல்-எ-அலம் எனும் பகுதியில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதில் காயங்களுடன் சுமார் 90 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கூரை வீடுகள் இடிந்து விழுந்ததால் அந்த இடிபாடுகளில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதல் தொடர்பாக பொறுப்பு ஏற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு தேர்விற்காக தயாராகி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்க துருப்புகளை வருகின்ற செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு திரும்ப பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்ததிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.