தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முன் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியில் வசித்து வரும் அமல்தாஸ் என்பவருடைய மகள் சுஜாவுக்கு ( 30 ), வீரராகவன் என்பவருடன் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இந்த தம்பதிக்கு ஜோகித் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு சுஜாவின் சகோதரியை திருமணம் செய்து தருமாறு அவர் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். மேலும் சுஜாவிடம், வீரராகவன் என் சகோதரனுக்கு உன் தங்கையை திருமணம் செய்து வைக்குமாறு அழுத்தமாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு அமல்தாஸ் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் வீரராகவனுக்கும், சுஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையில் இருந்த சுஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அமல்தாஸ் தனது மகளை அவளுடைய மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இறந்துபோன சுஜா தற்கொலைக்கு முன்பாக கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தன்னை சித்திரவதை செய்ததாகவும், தனது இறப்புக்குப் பின் தனது குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாக கூறியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.