கடந்த 15 வருடங்களாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அனைவருக்கும் தெரிந்த ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி முகவர்கள் என அனைவரும் பிரத்தியேக அலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவது வழக்கம். அதன் மூலம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 வருடங்களாக அனைவருக்கும் தெரிந்த ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் போரிஸ் ஜான்சன் கடந்த 2006-ஆம் ஆண்டு எம்.பி. பதவியில் இருந்த போது செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது அலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். அப்போது அந்த எண் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.
எனவே அதே அலைபேசி எண்ணை பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கடந்த 15 வருடங்களாக பயன்படுத்தி வருவது அவருடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் தொழிலதிபர் ஜேம்ஸ் டைசனுடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் வரி பிரச்சினை தொடர்பாக பேசிய வாட்ஸ்அப் மற்றும் ஆடியோ செய்தி பரிமாற்றங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் “தேசிய பாதுகாப்பு விஷயத்தில் தனது பொறுப்புகளை அறிவார்” என்று உள்துறை அலுவலக மந்திரி விக்டோரியா அட்கின்ஸ் கூறியுள்ளார். மேலும் அந்த எண் பொது தளத்தில் இருந்தது என்ற உண்மையை ஊடகங்கள் வெளிப்படுத்தியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களை விமர்சித்துள்ளார். இதற்கிடையே ஊடகங்கள் பிரதமருடைய அலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது “சுவிட்ச் ஆப்” என்று வருவதாக தெரிவித்துள்ளன.