தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகள் மட்டுமே அனுமதி. மேலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களோடுவணிகத்தை தொடர அரசு அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இல்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தை அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று முதல் மே 15ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கடையடைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.