சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பின் அகரத்திலும், கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 குழிகள் தோண்டப்பட்ட போது சிறிய, பெரிய நத்தை கூடுகள், மண்பாண்ட ஓடுகள், சேதமடைந்த பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மனித மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், எலும்பு உட்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.
தற்போது மூன்றாவது குழிகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்று பானைகள் சேதமுற்ற நிலையில் இருப்பது தொடர்ச்சியாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் காதில் அணியக் கூடிய பழங்கால தங்க வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது வளையமாக இருந்தால் 1.99 சென்டிமீட்டர் விட்டமும், அதனை நீட்டினால் 4.5 சென்டிமீட்டர் நீளமும் உள்ளது என்று தெரிய வருகிறது. மேலும் அந்த வளையத்தை பரிசோதனைக்கு அனுப்பிய பிறகே அது எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.