திண்டுக்கல்லில் நெசவு தொழிலாளி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனி முத்துசாமி குளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று பிணமாக மிதந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் குளத்தில் மூழ்கி பலியானவர் வேடப்பட்டி பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவரது மகன் பிரபு (31) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நெசவு தொழில் செய்து வந்துள்ளார் என்பதும் தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி குளத்தில் விழுந்தாரா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.