நெல்லையில் மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து 9 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது கீதாவிற்கு எதிரே பைக்கில் முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து 2 நபர்கள் வந்தனர். இதனையடுத்து பைக்கின் பின்னாலிருந்த மர்ம நபர் திடீரென்று கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர்.
அதன்பின் கீதா கத்திக் கூச்சலிட்டு, அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் நகையுடன் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து கீதா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.