சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவை மீறி வியாபாரிகள் இறைச்சி கடைகளை திறந்தனர்.
அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும், தினமும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமையில் இறைச்சி கடைகளில் கூட்டமாக குவிந்தனர். அதனை தொடர்ந்து இறைச்சி கடைகள் சனிக்கிழமை அன்று செயல்பட அரசு தடைவிதித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், திருப்பத்தூர், கல்லல், தேவகோட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் இறைச்சிக் கடைகள் அதிகாலை முதல் மூடப்பட்டன.
இந்நிலையில் சிங்கம்புணரி, காரைக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் இறைச்சி மீன் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வியாபாரமும் நடைபெற்றது. இதையடுத்து காலையிலேயே ஏராளமான மக்கள் இறைச்சி கடைகளில் கூட்டமாக குவிந்ததோடு இறைச்சிகளையும் வாங்கி சென்றனர். எனவே அரசு விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் மக்கள் நலனுக்காக தான் என்பதை பொதுமக்களும், வியாபாரிகளும் உணர வேண்டும்.